Monday, April 6, 2009

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (1869 - 1948)


இந்தியாவின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் தலை சிறந்த தலைவராக விளங்கியவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆவார். இந்தக் காரணத்தாலேயே, இவரை இந் நூலின் மூலப் பகுதியில் சேர்க்க வேண்டும் என்று மிகப் பலர் வலியுறுத்தினார்கள். ஆனால், இங்கிலாந்து வல்லரசின் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவுக்கு விடுதலை, முன்னரோ பின்னரோ கட்டாயமாகக் கிடைத்துவிடக்கூடிய நிலை இருந்தது. குடியேற்ற ஆதிக்க முறையை ஒழித்துக்கட்டும் வகையில் வரலாற்றுக் சக்திகள் வலுவுடன் முன்னேறிக்கொண்டு வந்ததை நோக்கும் போது காந்தி தோன்றியிராதிருந்தால் கூட 1947-இல் இல்லாவிட்டாலும் அதற்குச் சில ஆண்டுகளுக்குள்ளேயே இந்தியா உறுதியாக விடுதலையடைந்திருக்கும் என்று கூறலாம்.

அன்பை அடிப்படையாகப் கொண்டு, பகைவனையும் நேசித்து வன்முறையை அறவே விட்டொழித்துக் கொடுமைகளை அப்புறப்படுத்துவதற்கு காந்தி கையாண்ட சத்தியாக்கிரகம் என்னும் அறப்போர் முறை இந்தியாவை விட்டு வெள்ளையரை வெளியேற்றுவதில் இறுதியில் வெற்றி கண்டது என்பது உண்மைதான் எனினும், இதற்குப் பதிலாக இன்னும் சற்றுக் கடுமையான முறைகளை இந்தியர்கள் கையாண்டிருந்தால் இந்தியாவுக்கு இன்னும் முன்னதாகவே சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவர். மொத்தத்தில், இந்தியாவின் விடுதலையை காந்தி விரைவுபடுத்தினாரா என்பதை உறதியாகக் கூறுவது கடினம் எனினும், (அந்த வகையிலாயினும்) காந்தி நடவடிக்கையின் நிகர விளைவு சிறிதே என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. தவிரவும் இந்திய விடுதலை இயக்கத்தைக் தோற்றுவித்தவர் காந்தி அன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. (இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சி 1885 ஆம் ஆண்டிலேயே தொடங்கப் பெற்றுவிட்டது) மேலும், இந்தியா இறுதியாக விடுதலையடைந்தபோது காந்தி மட்டுமே முக்கியமான அரசியல் தலைவராக இருக்கவில்லை.

எனினும் காந்தியின் தலையாய முக்கியத்துவம் அவர் வலியுறுத்திய அகிம்சைக் கொள்கையையே சார்ந்திருக்கிறது எனச் சிலர் கூறுவர். (அவரது கொள்கைகள் முற்றிலும் அவருக்கே சொந்தமானவை அல்ல. தோரோ, டால்ஸ்‘டஸ் விவிலியத்தின் புதிய ஏற்பாடு, பல்வேறு இந்து வேத நூல்கள் ஆகியவற்றிலிருந்து தமது கொள்கைகளைத் தாம் பெற்றதாக காந்தி கூறியிருக்கிறார்.) காந்தியின் கொள்கைகள் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், அவை உலகை அடியோடு மாற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், தீவினைப் பயனாக, அவரது கொள்கைகள் இந்தியாவில் கூடப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கோவாவிலிருந்து போர்ச்சுகீசியரை வெளியேற்றுவதற்கு 1954-55 இல் காந்தியின் அறப்போர் முறைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இயக்கம் தன்குறிக்கோளை எட்டுவதில் வெற்றி பெறவில்லை. அதனால் சில ஆண்டுகளுக்கு பிறகு (1962) இந்திய அரசு ஓர் இராணுவப் படையெடுப்பு மூலமாகக் கோவாவை விடுவித்தது. அது மட்டுமின்றி கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தானுடன் மூன்று முறை போர் புரிந்துள்ளது. சீனாவுடன் ஓர் எல்லைப் போரில் இந்தியா ஈடுபட்டது. காந்தியின் முறைகளைக் கையாள மற்ற நாடுகளும் தயங்குகின்றன. காந்தி தமது அறப்போர் முறையைத் தொடங்கிய பின்பு ஏறத்தாழ 70 ஆண்டுகளில், இவ்வுலகம், வரலாறு கண்டிராத இரத்தக் களரிமிக்க இருபெருங் கொடிய போர்களைக் கண்டிருக்கிறது.

அப்படியானால், ஒரு தத்துவஞானி என்ற முறையில் காந்தியைத் தோல்வி கண்டவர் என்ற முடிவுக்கு வரலாமா? தற்போதைக்கு அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயினும் இயேசு கிறிஸ்துவின் இறப்புக்கு 30 ஆண்டுகளுக்குப் பின்பு விவேகமும் கல்வியறிவும் வாய்ந்த ஓர் ரோமானியன் நாசரேத்தின் இயேசுவை - அவரைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்திருப்பானேயாகில் - ஒரு தோல்வியாளர் என்றே ஐயத்திற்கிடமின்றி முடிவு கட்டியிருப்பான் என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். அத்துடன், கன்ஃபூசியஸ் எத்துணையளவுக்குச் செல்வாக்குப் பெறுவார் என்பதை கி.மு. 450 ஆம் ஆண்டில் யாரும் ஊகித்திருக்க முடியாது. எனினும், இதுகாறும் நிகழ்ந்தவற்றைக் கொண்டு மதிப்பிடும் போது இந்த நூலில் பெருமைக்குரிய ஒரு சிறப்புக் குறிப்புக்கு மட்டுமே காந்தி உரிமையுடையவர் எனத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment