Monday, April 6, 2009

ஃபெர்டினாண்டு மகல்லன் (1480 - 1521)


கடல் வழியாக முதன் முதலில் உலகத்தைச் சுற்றிவந்த நாடாய்வுச் குழுவின் தலைவர் என்ற புகழைப் பெற்றவர் போர்ச்சுக்கீசிய நாடாய்வாளர் ஃபெர்டினாண்டு மகல்லன் (Ferdinand Magellan) ஆவார்.

இவருடைய இந்தப் பயணம் மனித வரலாற்றிலேயே மிகச் சிறப்பு வாய்ந்தது எனலாம். இந்தப் பயணத்தை முழுமையாக முடிப்பதற்கு மூன்றாண்டுகளுக்குக் குறைவான காலமே பிடித்தது. மகல்லன், மிகச் சிறிய அலங்கோலமான, கசிவுடைய ஐந்து கப்பல்களுடன் ஸ்பெயினிலிருந்து தமது பயணத்தைத் தொடங்கினார். அவற்றில் ஒரு கப்பல் மட்டுமே பாதுகாப்பாக ஐரோப்பா மீண்டது. அவருடன் மொத்தம் 265 ஆட்கள் சென்றனர். அவர்களில் 18 பேர் மட்டுமே உயிரோடு திரும்பினர். இந்தப் பயணத்தின்போது இறந்தவர்களில் மகல்லனும் ஒருவர். (இந்தப் பயணத்தின் மிகக் கடினமான பகுதியில் குழுவுக்கு இவரே தலைமை தாங்கினார். ஃபிலிப்பைன் தீவில் இவருடைய ஆட்களுக்கும் தீவு மக்களுக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் மகல்லனும், அவருடைய ஆட்களில் பலரும் இறந்தனர்.) எனினும், இறுதியில் அந்தப் பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. உயிர் பிழைத்த சிலர் எஞ்சியிருந்த ஒரே கப்பலில் தொடர்ந்து பயணம் செய்து ஸ்பெயினை அடைந்தனர். இப்பயணத்தால் பூமி உருண்டையாக இருக்கிறது என்ற உண்மை ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டது.
மகல்லனின் திறமையான தலைமையும் இரும்பு போன்ற உரம் வாய்ந்த மன உறுதியும்தான் இந்தப் பயணத்தின் வெற்றிக்கு மூலம் காரணம் என்பது மிகத் தெளிவு. இவருடைய மாலுமிகளில் பெரும்பாலோர், புறப்பட்ட சில மாதங்களிலேயே நாடு திரும்ப விரும்பினர். பயணத்தை தொடர்வதற்காக மகல்லன் அவர்களின் ஒரு கலகத்தையும் அடக்க வேண்டியிருந்தது. அவருடைய அபாரத் துணிவும், திறமையும், விடாமுயற்சியும் அவரை மீகாமர்கள், நாடாய்வாளர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் என்ற பெருமைக்கு உரியவராக்குகின்றன.

ஆனால் உள்ளபடிக்கு அவருடைய சாதனையின் செல்வாக்கு மிகச் சொற்பமேயாகும். படித்த ஐரோப்பியர்கள், பூமி உருண்டையானது என்பதை ஏற்கெனவே அறிந்திருந்தனர். மேலும், மகல்லன் பயணம் செய்த கடல்வழி, ஒரு முக்கியமான வாணிகத் தடமாக ஆகிவிடவில்லை. வாஸ்கோட காமாவின் பயணத்தைப் போலன்றி, மகல்லன் பயணம் ஐரோப்பாவிலோ கிழக்கு நாடுகளிலே பெருஞ்செல்வாக்கைப் பெறவில்லை. எனவேதான், அவருடைய பயணம் அவருக்கு இறவாப் புகழை ஈட்டிக் கொடுத்த போதிலும், அது, அவரை வரலாற்றில் மிக்க செல்வாக்குப் பெற்ற நூறு பேரில் ஒருவராகச் சேர்ப்பதற்கு அவருக்குத் தகுதியைக் பெற்றுத் தரவில்லை.

No comments:

Post a Comment