Monday, April 6, 2009

அந்துவான் லோரான் லாவாசியர் (1743 - 1794)


பெரும் ஃபிரெஞ்சு அறிவியலாளரான அந்துவான் லோரான் லாவாசியர் இரசாயனவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தவராவார். 1743 இல் அவர் பாரிசில் பிறந்தபோது, இரசாயனவியலானது இயற்பியல், கணிதம், வானவியல் ஆகியவற்றை விட பின் தங்கிய நிலையிலிருந்தது. அப்போது இரசாயனவியலார் தனிப்பட்ட உண்மைகள் பலவற்றைக் கண்டுபிடித்திருந்தனர். ஆயினும் சிதறிய இச் செய்திகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு கொள்கை அமைப்பு இல்லாதிருந்தது. அக்காலத்தில் காற்றும் நீரும் தனிமங்களே என்று தவறாகக் கருதி வந்தனர். அதைவிட மோசமான தீயின் தன்மை பற்றி முற்றிலும் தவறான கருத்து நிலவியது. எரியக் கூடிய பொருள்களிலெல்லாம் ஃப்ளோஜிஸ்டன் எனும் ஒரு பொருள் இருப்பதாக ஊகித்தனர்.

1754 முதல் 1774 வரை அறிவுத் திறமை மிகு இயைபியலாளர்களான ஜோசப் பிளாக், ஜோசப் ப்ரீஸ்ட்லி, ஹென்றி காவன்டிஷ் போன்றோர் ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு போன்று முக்கிய வாயுக்களைத் தனியாகப் பிரித்தனர். ஆயினும், ஃப்ளோஜிஸ்டன் கொள்கையை இவர் ஏற்றுக் கொண்டிருந்தமையால், தாம் கண்டுபிடித்த இரசாயனப் பொருள்களின் இயல்பை அல்லது சிறப்பை இவர்களால் கண்டறிய முடியவில்லை. எடுத்துக்காட்டாக, ஆக்சிஜன் என்பதை இவர்கள் ஃப்ளோஜிஸ்டன் அகற்றப்பட்ட காற்று என்றனர். (மரச்சிராய் சாதாரண காற்றில் எரிவதை விட ஆக்சிஜனில் நன்றாக எரியுமெனத் தெரிந்தது. ஒருவேளை ஃப்ளோஜிஸ்டன் வெளியேறிய காற்று எரியும் கட்டையிலுள்ள ஃப்ளோஜிஸ்டன் எளிதில் ஈர்க்க முடியுமெனக் கருதினர்). அடிப்படை சரியாக அறிந்து கொள்ளும் வரை இயைபியலில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட முடியாமலிந்தது. லாவாசியர் துண்டு துக்காணிகளான இச்செய்திகளைச் சரியாக ஒருங்கிணைத்து, இயைபியல் கொள்கைகளைச் சரியான வகையில் வகுத்தார். முதலாவது, அவர் ஃப்ளோஜிஸ்டன் கொள்கை முற்றிலும் தவறானதென்று கூறினார். ஃப்ளோஜிஸ்டன் என்று ஒரு பொருளில்லை என்றார். எரியும் பொருளும், ஆக்சிஜனும் சேர்ந்து ஏற்படும் இரசாயனக் கலப்புதான் எரிதலாகும். இரண்டாவது, நீர் ஒரு தனிமம் அன்று. ஆக்சிஜனும் நைட்ரஜனும் சேர்ந்த ஒரு இரசாயனக் கூட்டுப் பொருள். காற்றும் ஒரு தனிமம் அன்று. ஆக்சிஜன், நைட்ரஜன் எனும் இரு முக்கிய வாயுக்கள் கலந்த கலவையாகும். அவருடைய இக்கூற்றுகளெல்லாம் இன்று தெளிவாக விளங்குபவை. ஆயினும் இவை லாவாசியருக்கு முன் வாழ்ந்தவர்களுக்கோ, அவருடைய காலத்தவருக்கோ தெளிவாகத் தெரியவில்லை. லாவாசியர் இக்கொள்கைகளை வகுத்து அவற்றிற்குரிய சான்றுகளை எடுத்துக் காட்டிய போதிலும், பல பெரும் இயைபியலார் அவருடைய கருத்துகளை ஏற்க மறுத்தனர்

. லாவாசியரின் எலிமென்ட்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி (1789) எனும் சிறந்த நூல் அவருடைய கொள்கையையும் அதை எண்பிக்கும் சான்றுகளையும் தெளிவாகவும் உறுதியாகவும் விளக்கியது.இளம் தலை முறையினரான இரசாயனவியலார் அதை நம்பி ஏற்றனர். லாவாசியர் நீரும், காற்றும் இரசாயனத் தனிமங்கள் அல்லவென்று காட்டியபின், தாம் தனிமங்களல்லவென்று கருதிய பொருள்களின் பட்டியலைத் தமது நூலில் இணைத்தார். இப்பட்டியலில் சில தவறுகளிருப்பினும், இரசாயனத் தனிமங்களின் இன்றைய பட்டியலானது லாவாசியரின் பட்டியலின் விரிவான பட்டியலேயாகும்.

லாவாசியர் (பெர்த்தோல்த், ஃபூர்கருவா, கியூத்தோன் தெமோர்லோ ஆகியோருடன் சேர்ந்து) இரசாயனவியலின் கலைச்சொல் தொகுதியை உருவாக்கினார். அவருடைய தொகுப்பே இன்று பயன்படுத்தப் பெறும் சொற்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அதன்படி ஓர் இரசாயனப் பொருளின் கலப்பு அதன் பெயரையே பெறுகின்றது. முதல் முறையாக ஓரே வகையான கலைச் சொற்களைப் பயன்படுத்தியதால் உலகம் முழுவதுமுள்ள இரசாயனவியலார் தாம் கண்டுபிடித்தவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
இரசாயன எதிரியக்கத்தில் பொருண்மை மாறுவதில்லை எனும் கொள்கையை முதன்முதலாகத் தெளிவாக விளக்கியவர் லாவாசியராவார். இரசாயன எதிரியக்கம் ஒரு பொருளிலுள்ள தனிமங்களை மாற்றியமைக்கலாம். ஆனால் அவற்றில் எதையும் அழிப்பதில்லை. பொருள்களின் எடை மூலக்கூறுகளின் எடையினின்று வேறுபடுவதில்லை. எதிரியக்கத்தில் ஈடுபடும் இரசாயனப் பொருள்களைக் கவனமாக எடை போடுவதன் முக்கியத்துவத்தை லாவாசியர் வலியுறுத்தியது இரசாயனவியலை ஒரு நுட்பதிட்பமான இயலாக மாற்றத் துணை புரிந்தது.

லாவாசியர் புவியமைப்பின் வளர்ச்சிக்கு ஓரளவும், உடலியல் வளர்ச்சிக்குப் பெருமளவும் தொண்டாற்றினார். கவனமாக (லாப்ளாஸ’ன் துணையுடன்) பரிசோதனைகளை நடத்தி, சுவாசிக்கும் செயலானது மெதுவாக எரியும் செயலுக்கு சமமென்று அவர் காட்டினார். அதாவது, மனிதரும் பிற விலங்குகளும் தாம் உட்கொள்ளும் ஆக்சிஜனைப் பயன்படுத்தி கரிமப் பொருளை மெதுவாக உள்ளே எரிப்பதன் மூலம் ஆற்றலைப் பெறுகின்றனர். இரத்தச் சுழற்சியைப் பற்றி ஹார்வி கண்டுபிடித்ததைப் போன்ற முக்கியமான இக்கண்டுபிடிப்பே லாவாசியருக்கு இப்பட்டியலில் உரிய இடத்தைத் தரக்கூடியது. ஆயினும் அவர் இரசாயனவியல் கொள்கையை வகுத்ததினால் இரசாயனவியலுக்கு ஒரு சரியான பாதையை வகுத்தார் தற்கால இரசாயனவியலை நிறுவியவர் என்கிறோம். அப்பெயர் அவருக்கு மிகவும் பொருந்தும். இப்பட்டியலில் இடம்பெறும் ஒரு சிலரைப் போல், லாவாசியரும் இளைஞராக இருந்தபோது சட்டம் பயின்றார். அவர் சட்டத்தில் பட்டம் பெற்று, ஃபிரெஞ்சு வழக்கறிஞர் குழத்தில் இடம் பெற்ற போதிலும், வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடவில்லை. ஆயினும் ஆட்சித் துறைப் பணியிலும், பொதுநலப் பணியிலும் ஈடுபட்டார். ஃபிரெஞ்சு அரச அறிவியல் கழகத்தில் செயலாற்றினார்.

அவர் ஃபெர்ம் ஜெனரால் எனும் நிறுவனத்தில் உறுப்பினராக அதன் விளைவாக, 1789 இல் ஃபிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட பிறகு புரட்சி அரசாங்கம் அவரைப் பற்றி ஐயப்படத் துவங்கியது. பிறகு,. ஃபெர்ம் ஜெனரால் உறுப்பினருள் 21 பேருடன் அவரையும் கைது செய்தது. புரட்சிக் கால நீதி நுட்பமாகத் தீர்ப்பிடவில்லையெனினும் விரைவாகத் தீர்ப்பளித்தது. ஒரே நாளில் (மே 8, 1794) 28 பேரும் விசாரிக்கப் பட்டு, குற்றத் தீர்ப்பிடப்பட்டுக் கொல்லப் பட்டனர். லாவாசியரை இழந்த அவருடைய மனைவி அவருடைய ஆராய்ச்சிகளில் உதவிய அறிவுடைய மங்கையராவார்.
குற்ற விசாரணையின் போது, லாவாசியரைக் காப்பாற்றுவதற்காக வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. அவர் நாட்டுக்கும் அறிவியலுக்கும் ஆற்றிய தொண்டுகள் எடுத்துக்காட்டப் பெற்றன. நீதிபதி அவற்றையெல்லாம் ஏற்க மறுத்து, குடியரசுக்கு அறிஞர்கள் தேவையில்லை என்று சுருக்கமாகக் கூறிவிட்டார். அத்தலையை வெட்டுவதற்கு ஒரு நொடி தான் ஆனது. ஆனால் அது போன்ற தலையைப் பெறுவதற்கு நூறாண்டுகளானாலும் இயலாது. என்று அவருடைய தோழரும் கணித மேதையுமான லாக்ரான்ஷ் கூறியதில் ஓரளவு உண்மை இருக்கின்றது.

அகஸ்டஸ் சீசர்(கி.மு.63 - கி.பி.4)


ரோமானியப் பேரரசு நிறுவிய அகஸ்டஸ் சீசர் வரலாற்றில் தலைமை சான்ற பெரியார்களில் ஒருவராவார். கி.மு. முதல் நூற்றாண்டில் ரோமானியக் குடியரசைச் சீர் குலைத்த உள்நாட்டுப் போர்களை இவர் முடிவுக்குக் கொண்டு வந்தார். ரோமானியப் பேரரசின் அரசைச் செம்மையாக சீரமைத்து இரு நூற்றாண்டுக் காலம் இப்பேரரசு உள்நாட்டு அமைதியோடும், செல்வச் செழிப்போடும் விளங்குவதற்கு அடிகோலினார்.

இவருடைய உண்மைப் பெயர் காயஸ் ஆக்டேவியஸ் ஆகும். ஆக்டேவியஸ் என்ற பெயரே பெரும்பாலும் இவருக்கு வழங்கி வந்தது. அகஸ்டஸ் என்ற பட்டப் பெயர், இவரது 31 ஆம் வயதில் தான் இவருடைய பெயருடன் இணைந்தது. இவர். கி.மு. 63 ல் பிறந்தார். அப்போது ரோமில் முன்னணி அரசியல் தலைவராக விளங்கிய ஜூலியஸ் சருக்கு உடன் பிறந்தவனின் மகளுடைய மகன் இவர். ஜூலியஸ் சீசருக்குச் சொந்த மகன் யாரும் இல்லை. அவர் இளைஞர் ஆக்ஸ்டேவியஸ் மீது அன்பு கொண்டிருந்தார். எனவே, அக்டேவியசுக்கு இராணுவத்திலும், அரசியலிலும் பயிற்சியளித்து, இவரை அரசியல் தலைமையை ஏற்கும், தகுதியுடையவராக உருவாக்கினார். ஆழ்ந்த எண்ணங்களும், உறுதியான உள்ளமும் படைத்த அக்டேவியஸ் படிப்படியாக முன்னணிக்கு வந்து,சீசரின் தத்துப் புதல்வனாகவும் ஆனார். கி.மு. 41 இல் ஜூலியஸ் சீசர் கொலையுண்டு மாண்டபோது, அக்டேவியஸ் 18 வயது மாணவராகவே இருந்தார். சீசர் இறந்த பின்பு, ரோமப் பேரரசின் ஆட்சியைப் பிடிப்பதில் இராணுவத் தளபதிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இடையே நீண்ட காலம் கடும் போராட்டம் நடந்தது. அக்டேவியசின் அரசியல் எதிரிகள், ரோமானியப் பேரரசின் கொந்தளிப்பான அரசியல் அரங்கில் நீண்ட அனுபவம் பெற்ற பழுத்த அரசியல்வாதிகளாக இருந்தனர். அவர்கள் முதலில், இளைஞன் அக்டேவியசை ஓர் அச்சுறுத்தலாகவே கருதவில்லை. ஜூலியஸ் சீசர் தத்துப் புதல்வன் என்ற தகுதி மட்டும் தான் அக்டேவியஸ் மிகத் திறம்படப் பயன்படுத்திக் கொண்டு, சீசருடன் மிக நெருக்கமாக இருந்த சில படைத் தலைவர்களைத் தம்முடைய ஆதரவாளர்களாக மாற்றுவதில் வெற்றி கண்டார். எனினும், சீசரின் படையினரில் பலர் ஆதரித்தனர். அடுத்த சில ஆண்டுகளில் பல போர்களில் தமது அரசியல் எதிரிகளை ஒவ்வொருவராக அக்டேவியஸ் தோற்கடித்தார்.

ஆன்டனி மட்டும் இன்னும் எஞ்சியிருந்தார். ஆன்டனியுடன் அக்டேவியஸ் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, ரோமானியப் பேரரசின் அதிகாரத்தை அவருடன் பகிர்ந்து கொண்டார். ரோமானியப் பேரரசின் கிழக்குப் பகுதியை ஆன்டனி தம் ஆட்சியில் வைத்துக் கொண்டார். மேற்குப் பகுதியை அக்டேவியஸ் ஆண்டு வந்தார். இருவருக்குமிடைய சில ஆண்டுகள் வரை அமைதியற்ற போர் நிறுத்தம் நிலவியது. இந்தப் போர் நிறுத்தக் காலத்தின் போது, ஆன்டனி, கிளியோபாட்ராவுடன் காதல் கேளிக்கைகளில் அதிகக் கவனம் செலுத்தி வந்தார். அதே சமயம் அக்டேவியஸ் தமது வலிமையைப் படிப்படியாகப் பெருக்கிக் கொண்டிருந்தார். கடைசியாக கி.மு. 32 இல் இருவருக்குமிடையே போர் மூண்டது. கி.மு. 31 இல் நடந்த ஆக்டியம் கடற்போரில் அக்டேவியஸ் பெரும் வெற்றி பெற்றார். இந்தப் போர், இவ்விருவருக்குமிடையிலான அதிகாரப் போட்டிக்கு இறுதியாக முற்றுப் புள்ளி வைத்தது. அடுத்த ஓராண்டுக்குள் அக்டேவியஸ் முழு வெற்றி பெற்றதும் போர் நின்றது. ஆன்டனியும் கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்.

அக்டேவியஸ் இப்போது, 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூலியஸ் சீசர் பெற்றிருந்த அதே அதிகாரத்தையும் வலிமையையும் பெற்றிருந்தார். ரோமானியப் பேரரசில் நடைபெற்று வந்த குடியரசு ஆட்சி முறையை ஒழித்து விட்டு, தாம் மன்னராக முடி சூட்டிக் கொள்ள சீசர் விரும்பியதாகத் தோன்றியபோது, அவர் கொலை செய்யப்பட்டார். கி.மு. 30-க்குள் பல உள்நாட்டுப் போர்கள் நடந்தன. ரோமாபுரியில் குடியரசு முறையிலான பல அரசுகள் தோல்வியடைந்தன. பெயரளவில் ஒரு குடியரசு ஆட்சியை வைத்துக் கொண்டு இரக்க மனப்பான்மை கொண்ட ஓர் சர்வாதிகார ஆட்சியை (Benevolent Dictatorship) ஏற்றுக் கொள்ள ரோமானிய மக்கள் தயாராக இருந்தனர்.

ஆட்சியைப் பிடிப்பதற்கான போராட்டத்தில் அக்டேவியஸ் ஈவிரக்கமின்றி நடந்து கொண்டபோதிலும், அவர் தமது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்பு, மிகவும் சமரச மனப்போக்குடன் நடந்து கொண்டார். ரோமானிய குடியரசின் ஆட்சிப் பேரவையினரின் (Senators) உணர்ச்சிகளைச் சாந்தப்படுத்துவதற்காக இவர். கி.மு. 27 இல் நாட்டில் மீண்டும் குடியரசை ஏற்படுத்தப் போவதாக அறிவித்தார். அத்துடன் தமது அரசப் பதவிகள் அனைத்திலிருந்தும் விலகிவிடவும் முன் வந்தார். எனினும், ஸ்பெயின், கால், சிரியா ஆகிய மாகாணங்களின் தலைமைப் பொறுப்பைத் தாமே வைத்துக் கொண்டார். ரோமானியப் படைகளில் பெரும்பாலானவை இந்த மூன்று மாகாணங்களிலும் இருந்தன. எனவே, நடைமுறையில் அதிகாரம் இவருடைய கைகளிலேயே பத்திரமாக இருந்தது. குடியரசின் ஆட்சிப் பேரவை இவருக்கு அகஸ்டஸ் என்ற பட்டப் பெயரைச் சூட்டியது. ஆனால், இவர் அரசர் என்ற பட்டத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ரோமானியப் பேரரசுப் பெயரளவில் இன்னும் குடியரசாகவே இருந்தது. அகஸ்டஸ் முதல் குடிமகன் என்ற நிலையிலேயே ஆட்சி புரிந்து வந்தார். ஆனால், நடைமுறையில் நன்றியும் பணிவிணக்கமும் உடையதாக இருந்த ஆட்சிப் பேரவை, அகஸ்டசை அவர் விரும்பிய எல்லாப் பதவிகளிலும் நியமித்தது. அவர் தமது எஞ்சிய ஆயுட்காலம் முழுவதிலும் உண்மையில், ஒரு சர்வாதிகாரியாகவே விளங்கினார். இவர் 70 ஆம் வயதில் கி.பி. 14 இல் இறந்தபோது, ரோமானியப் பேரரசு குடியரசு முறையிலிருந்து முற்றிலுமாக முடியாட்சி முறைக்கு மாறி விட்டிருந்தது. எனவே, இவருக்குப் பிறகு இவரது தத்துவப் புதல்வன் எவ்விதச் சிரமமுமின்றி ஆட்சிப் பீடம் ஏறினார். தொடர்ந்து இவரது மரபினர் பலர் ரோமானியப் பேரரசர்களாக ஆண்டனர்.

உலக வரலாற்றில் இரக்க மனப்பான்மை கொண்ட ஓர் சர்வாதிகாரிக்கு அகஸ்டஸ் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவர் தேர்ந்த அரசியல் மேதையாகவும் திகழ்ந்தார். அவரது சமரச கொள்கைகள், ரோமானிய உள்நாட்டுப் போர்களினால் விளைந்த பெரும் பிளவுகளை நீக்குவதற்கு உதவின.
ரோமானியப் பேரரசை நாற்பதாண்டுகளுக்கு மேல் அகஸ்டஸ் ஆண்டார். அவருக்குப் பின்னரும் பல ஆண்டுகள் வரை அவருடைய கொள்கைகள் இப்பேரரசில் செல்வாக்குப் பெற்றிருந்தன. அவருடைய ஆட்சிக் காலத்தில் ரோமானியப் படைகள், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கவாஷ’யா ஆகிய நாடுகளையும் பால்க்கன் நாடுகளில் பெரும்பகுதிகளையும் வென்றன. அவருடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் ரோமானியப் பேரரசின் வட எல்லை ரைன்-டான்யூப் கோடு வரை நீடித்திருந்தது. அடுத்த சில நூற்றாண்டுகள் வரையிலும் இந்த வட எல்லைக் கோடு மாறவே இல்லை.

அகஸ்டஸ் இணையற்ற திறமை வாய்ந்த நிருவாகியாக விளங்கினார். நாட்டில் திறன் வாய்ந்த ஆட்சிப் பணி முறையை நிறுவினார். வரி அமைப்பு முறையைத் திருத்தியமைத்தார். ரோமானிய அரசின் நிதியமைப்பு முறையையும் சீர்திருத்தியமைத்தார். ரோமானிய இராணுவத்தைப் பெரிதும் மாற்றியமைத்தார். நிலையான கடற்படை ஒன்றையும் நிறுவினார். ரோமானியப் பேரரசின் மெய்க் காவல் படை (Praetorian Guard) ஒன்றையும் ஏற்படுத்தினார். இந்தப் படை பிந்திய நூற்றாண்டுகளில் பேரரசர்களை தெரிந்தெடுப்பதிலும், பதவியிலிருந்து அகற்றுவதிலும் பெரும் பங்கு கொண்டது.

அகஸ்டஸ் ஆட்சிக் காலத்தில், ரோமானியப் பேரரசு முழுவதிலும், நேர்த்தியான நெடுஞ்சாலைகள் ஏராளமாகப் போடப்பட்டன. ரோம் நகரில் பல அரசுக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. நகரம் பெருமளவுக்கு அழகுப்படுத்தப் பட்டது. பல கோயில்கள் கட்டப்பட்டன. பண்டைய ரோமானியச் சமயத்தை அகஸ்டஸ் ஆதரித்தார். அந்தச் சமயத்தைத் தழுவுவதை ஊக்குவித்தார். திருமணம் புரிந்து கொண்டு, குழந்தைகள் பெற்று குடும்பம் நடத்துவதை ஊக்குவிக்கும் சட்டங்கள் இயற்றினார்.

கி.மு. 30 முதற்கொண்டு, அகஸ்டஸ் ஆட்சியில் ரோமானியப் பேரரசில் உள்நாட்டு அமைதி நிலவியது. இதனால், நாட்டின் செல்வமும், வளமும் செழித்தோங்கின. கலைகள் ஓங்கி வளர்ந்தன. ரோமானிய இலக்கியத்தில் அகஸ்டஸ் காலம் ஒரு பொற்காலமாக விளங்கியது. தலை சிறந்த ரோமானியக் கலைஞர் வர்ஜில் இந்தக் காலத்தில் தான் வாழ்ந்தார். ஹோராஸ், லிவி போன்ற வேறு பல எழுத்தாளர்களும் இந்தக் காலத்தில் தான் வாழ்ந்திருந்தார்கள். ஒவிட் என்ற எழுத்தாளர் ஏனோ அகஸ்டசின் žற்றத்திற்கு ஆளானார். அவர் ரோமிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
அகஸ்டசுக்குச் சொந்தப் புதல்வர்கள் இல்லை. அவருடைய மருமகளும், இரு பேரப் பிள்ளைகளும் அவருக்கு முன்னரே இறந்துவிட்டனர். எனவே, அவர் தம் மனைவிக்கு முதற் கணவனால் பிறந்த மகனைத் தத்து மகனாக ஏற்றுக் கொண்டார். டைபீரியஸ் என்ற இந்தத் தத்து மகனையே தமது வாரிசாக நியமித்தார். இந்த அரச மரபில் பின்னர், காலிகுலா, நீரோ போன்ற அரசர்கள் ஆண்ட போதிலும், இந்த மரபு விரைவிலேயே அற்றுப் போயிற்று, எனினும் அகஸ்டஸ் ஆட்சியுடன் தொடங்கிய உள்நாட்டு அமைதி இருநூறு ஆண்டுகள் நீடித்தது. அமைதியும், வளச்செழிப்பும் மிகுந்த இந்த 200 ஆண்டுக் காலத்தில், அகஸ்டஸ், மற்ற ரோமானியத் தலைவர்கள் வெற்றி கொண்ட நாடுகளில் ரோமானியப் பண்பாடு ஆழவேரூன்றி ஆல்போல் பரந்து விரிந்தது.
பண்டைக் காலப் பேரரசுகள் அனைத்திலும் மிகவும் புகழ் வாய்ந்தது ரோமானியப் பேரரசேயாகும். பண்டைய நாகரிகத்தின் உச்ச நிலையாக ரோமானியப் பேரரசு விளங்கியது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், யூதர்கள். கிரேக்கர்கள் போன்ற பண்டைய உலக மக்களின் கொள்கைகளையும், பண்பாட்டுச் சாதனங்களையும் மேற்கு ஐரோப்பாவுக்குப் பரப்புகின்ற வடிகாலாகவும் ரோமானியப் பேரரசு திகழ்ந்தது.

அகஸ்டஸ் சீசரின் கொள்ளுப் பாட்டனாகிய ஜூலியஸ் சீசரின் சாதனைகளுடன் அகஸ்டசின் சாதனைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவையானதாகும். அகஸ்டஸ் அழகிய தோற்றமுடையவர்; அறிவாற்றலில் சிறந்தவர்; நல்லொழுக்க முடையவர்; பல இராணுவ வெற்றிகளைக் கண்டவர்; எனினும், முந்தைய சீசருக்கு இருந்த கவர்ச்சி இவருக்கு இல்லை. ஜூலியஸ் தம் காலத்தவரின் கற்பனையை அகஸ்டசை விட அதிகமாகத் தூண்டினார். அதனால் அவர் தமது புகழ் சிறிதும் குன்றாமல் அதிகப் புகழுடன் விளங்கினார். ஆனால், வரலாற்றில் அவர்களுடைய செல்வாக்கினை மதிப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த இருவரிலும் அகஸ்டஸ் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராகத் திகழ்கிறார்.

அகஸ்டசை மகா அலெக்சாந்தருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் நலமாக இருக்கும். இருவரும் மிக இளம் வயதிலேயே தங்கள் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். ஆயினும், அகஸ்டஸ் தலைமையிடத்தை எட்டுவதற்கு அலெக்சாந்தரைவிடக் கடுமையான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அகஸ்டசின் இராணுவத் திறன், அலெக்சாந்தரின் அளவுக்குச் சிறப்புடையதாக இருக்கவில்லை. எனினும், அவருடைய திறமை முனைப்பாகவே இருந்தது. அகஸ்டசின் வெற்றிகள் நீண்ட காலம் நிலைத்திருந்தன. இது இவ்விருவருக்குமுள்ள மிக முக்கிய வேறுபாடாகும். அகஸ்டஸ் எதிர்காலத்திற்காக மிகவும் கவனமாகத் திட்டமிட்டுச் செயற்பட்டார். அதன் விளைவாகவே, அவருடைய செல்வாக்கு மனித வரலாற்றில் கணிசமான அளவுக்கு நீண்ட காலம் நிலைபெற்று விளங்கியது.

அகஸ்டசை மா-சே-துங்குடன் அல்லது ஜார்ஜ் வாஷ’ங்டனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும். இந்த மூவருமே உலக வரலாற்றில் முக்கியமான ஓரளவு ஒரே மாதிரியான பங்குப் பணிகளை ஆற்றினர். எனினும், அகஸ்டசின் நீண்ட கால ஆட்சி, அவரது கொள்கைகளின் வெற்றி, உலக வரலாற்றில் ரோமானியப் பேரரசுக்கு ஏற்பட்ட முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, மற்ற இருவரையும்விட உயர்நிலையில் வைக்கத் தக்கவர் அகஸ்டஸ் எனலாம்.

ஃபெர்டினாண்டு மகல்லன் (1480 - 1521)


கடல் வழியாக முதன் முதலில் உலகத்தைச் சுற்றிவந்த நாடாய்வுச் குழுவின் தலைவர் என்ற புகழைப் பெற்றவர் போர்ச்சுக்கீசிய நாடாய்வாளர் ஃபெர்டினாண்டு மகல்லன் (Ferdinand Magellan) ஆவார்.

இவருடைய இந்தப் பயணம் மனித வரலாற்றிலேயே மிகச் சிறப்பு வாய்ந்தது எனலாம். இந்தப் பயணத்தை முழுமையாக முடிப்பதற்கு மூன்றாண்டுகளுக்குக் குறைவான காலமே பிடித்தது. மகல்லன், மிகச் சிறிய அலங்கோலமான, கசிவுடைய ஐந்து கப்பல்களுடன் ஸ்பெயினிலிருந்து தமது பயணத்தைத் தொடங்கினார். அவற்றில் ஒரு கப்பல் மட்டுமே பாதுகாப்பாக ஐரோப்பா மீண்டது. அவருடன் மொத்தம் 265 ஆட்கள் சென்றனர். அவர்களில் 18 பேர் மட்டுமே உயிரோடு திரும்பினர். இந்தப் பயணத்தின்போது இறந்தவர்களில் மகல்லனும் ஒருவர். (இந்தப் பயணத்தின் மிகக் கடினமான பகுதியில் குழுவுக்கு இவரே தலைமை தாங்கினார். ஃபிலிப்பைன் தீவில் இவருடைய ஆட்களுக்கும் தீவு மக்களுக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் மகல்லனும், அவருடைய ஆட்களில் பலரும் இறந்தனர்.) எனினும், இறுதியில் அந்தப் பயணம் வெற்றிகரமாக முடிவடைந்தது. உயிர் பிழைத்த சிலர் எஞ்சியிருந்த ஒரே கப்பலில் தொடர்ந்து பயணம் செய்து ஸ்பெயினை அடைந்தனர். இப்பயணத்தால் பூமி உருண்டையாக இருக்கிறது என்ற உண்மை ஐயத்திற்கிடமின்றி மெய்ப்பிக்கப்பட்டது.
மகல்லனின் திறமையான தலைமையும் இரும்பு போன்ற உரம் வாய்ந்த மன உறுதியும்தான் இந்தப் பயணத்தின் வெற்றிக்கு மூலம் காரணம் என்பது மிகத் தெளிவு. இவருடைய மாலுமிகளில் பெரும்பாலோர், புறப்பட்ட சில மாதங்களிலேயே நாடு திரும்ப விரும்பினர். பயணத்தை தொடர்வதற்காக மகல்லன் அவர்களின் ஒரு கலகத்தையும் அடக்க வேண்டியிருந்தது. அவருடைய அபாரத் துணிவும், திறமையும், விடாமுயற்சியும் அவரை மீகாமர்கள், நாடாய்வாளர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் என்ற பெருமைக்கு உரியவராக்குகின்றன.

ஆனால் உள்ளபடிக்கு அவருடைய சாதனையின் செல்வாக்கு மிகச் சொற்பமேயாகும். படித்த ஐரோப்பியர்கள், பூமி உருண்டையானது என்பதை ஏற்கெனவே அறிந்திருந்தனர். மேலும், மகல்லன் பயணம் செய்த கடல்வழி, ஒரு முக்கியமான வாணிகத் தடமாக ஆகிவிடவில்லை. வாஸ்கோட காமாவின் பயணத்தைப் போலன்றி, மகல்லன் பயணம் ஐரோப்பாவிலோ கிழக்கு நாடுகளிலே பெருஞ்செல்வாக்கைப் பெறவில்லை. எனவேதான், அவருடைய பயணம் அவருக்கு இறவாப் புகழை ஈட்டிக் கொடுத்த போதிலும், அது, அவரை வரலாற்றில் மிக்க செல்வாக்குப் பெற்ற நூறு பேரில் ஒருவராகச் சேர்ப்பதற்கு அவருக்குத் தகுதியைக் பெற்றுத் தரவில்லை.

ஆர்க்கிமிடீஸ் (கி.மு. 287 - கி.மு. 212)


பண்டைய உலகின் தலைசிறந்த கணித மேதையாகவும் விஞ்ஞானியாகவும் போற்றப்படுபவர். ஆர்க்கிமிடீஸ் ஆவார். நெம்புகோலின் தத்துவத்தையும் வீத எடைமான (specific Gravity) கோட்பாட்டையும் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ் தான் என்பர். எனினும், உண்மையில் ஆர்க்கிமிடீசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நெம்புகோல் அறியப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. நெம்புகோலின் செயல் விளைவை விவரிக்கும் சூத்திரத்தை முதன் முதலில் வகுத்துரைத்தவர் ஆர்க்கமிடீஸ் தான் என்று தெரிகிறது. ஆனால், ஆர்க்கிமிடீசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே, எகிப்தியப் பொறியியல் வல்லுநர்கள் நெம்புகோல்களைப் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதே போன்று, ஒரு பொருளின் மொத்த எடைக்கு மாறான அப்பொருளின் அடர்த்தி (கன அளவுடன் எடை மானத்துக்குள்ள விகிதம்) பற்றிய கோட்பாடு ஆர்க்கிமிடீசுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது. ஆர்க்கிமிடீசும், மணி முடியும் பற்றி வழங்கும் புகழ்பெற்ற கதை (''கண்டுபிடித்து விட்டேன்'' என்று கூவிக்கொண்டே ஆர்க்கிமிடிஸ் குளிக்கும் தொட்டியிலிருந்து குதித்துத் தெருக்களில் ஆடையின்றி ஓடியதாக இக்கதை முடிகிறது). ஆர்க்கிமிடீஸ் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் கோட்பாடும், ஒரு புதிய கோட்பாடு அன்று. ஏற்கெனவே நிலவிய ஒரு கொள்கையை, அவர் குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண வெற்றிகரமாகக் கையாண்டார்.

லியோனார்டோ டா வின்சி (1452 - 1519)


லியோனார்டோ டா வின்சி (Leonardo da vinci) இத்தாலியில் ஃபிளாரன்ஸ் அருகில் 1452 ஆம் ஆண்டில் பிறந்தார். 1519 ஆம் ஆண்டில் இறந்தார். அதற்கும் இன்று வரைக்குமிடையில் பல நூற்றாண்டுகள் கழிந்துவிட்ட போதிலும், உலகில் இதுகாறும் உயிர் வாழ்ந்த பல்துறைப் புலமை வாய்ந்த மிகச் சிறந்த மேதை இவர்தான் என்ற பெருமையைச் சிறிதும் மங்கச் செய்துவிடவில்லை. இது தனிப்பெருமை வாய்ந்தவர்களின் பட்டியலாக இருந்திருந்தால். முதல் 50 பேரில் ஒருவராக லியோனார்டோவும் இருந்திருப்பார். ஆனால், வரலாற்றில் உள்ளபடிக்கு அவர் பெற்றுள்ள செல்வாக்கைவிட மிக அதிகமான அளவுக்கு அவருடைய திறமையும் புகழும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே கூற வேண்டும்.

லியோனார்டோ விட்டுச் சென்றுள்ள குறிப்பேடுகளில் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற நவீன கண்டு பிடிப்புகளின் சித்திரங்களை வரைந்திருக்கக் காண்கிறோம். இந்தக் குறிப்பேடுகள், அவருடைய திறமைக்கும் தற்சிந்தனைக்கும் சான்று பகன்றபோதிலும், அவை உள்ளபடிக்கு அறிவியல் வளர்ச்சியில் செல்வாக்கு எதனையும் பெறவில்லை. முதலாவதாக, அந்த கண்டுபிடிப்புகளின் மாதிரிகளை அவர் உருவாக்கவில்லை. இரண்டாவதாக, அவருடைய சிந்தனைகள் மிகவும் தேர்ச்சித் திறன் வாய்ந்தனவாக இருந்தபோதிலும், அந்தக் கண்டுபிடிப்புகள் நடைமுறையில் செயற்பட்டிருக்கும் எனத்தோன்றவில்லை. ஒரு விமானம் அல்லது நீர்மூழ்கி பற்றியே ஒரு கருத்தைச் சிந்திப்பது ஒன்று நடைமுறையில் செயற்படக்கூடிய அதன் மாதிரியைத் துல்லியமாக வடிவமைத்து உருவாக்கம் செய்வது மற்றொன்று. உண்மையில், இந்த இரண்டாவது மிகக் கடினமானது. அற்புதமான கருத்துகளைச் சிந்தித்துவிட்டு, அவற்றின் நடைமுறை மாதிரிகளை உருவாக்கத் தவறியவர்களைப் பெரிய புத்தமைப்பாளர்களாகக் கொள்ள முடியாது மாறாக, தாம் சிந்தித்தவற்றை நடைமுறையில் உருவாக்கிக் காட்டுவதற்கும் உள்ளபடிக்கு இயங்கக் கூடியவற்றைத் தயாரிப்பதில் எதிர்ப்படும் இன்னல்களைச் சமாளிப்பதற்கும் ஏற்ற எந்திரவியல் மனப்போக்கும் பொறுமையும் வாய்ந்தவர்களைத் தான் தாமஸ் எடிசன், ஜெம்ஸ் வாட், ரைட் சகோதரர்கள் போன்றவர்களைத்தான் - உண்மையில் பெரும் புத்தமைப்பாளர்கள் என்று கூற முடியும். லியோனார்டோ அவ்வாறு செய்யவில்லை.

மேலும், அவருடைய கண்டுபிடிப்புகளைச் செயற்படுத்துவதற்குத் தேவையான துல்லியமான விவரங்கள் அனைத்தையும் அவரது சித்திரங்கள் கெண்டிருந்தாலும், அவற்றினால் ஒரு விளைவும் ஏற்பட்டிருந்திருக்காது. ஏனெனில், அவை அவருடைய குறிப்பேடுகளில் புதைந்து கிடந்தன. அவை, அவர் இறந்த பின்பு பல நூற்றாண்டுகள் வரையில் வெளியிடப்படாமலே இருந்தன. அவருடைய குறிப்பேடுகள் வெளியிடப்பட்டபோது, அவரது கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்திருந்த கொள்கைகள் ஏற்கனவே மற்றவர்களால் தனித்தனியே கண்டுபிடிக்கப்பட்டு விட்டிருந்தன. எனவே, ஒரு விஞ்ஞானி, புத்தமைப்பாளர் என்ற முறையில் லியோனார்டோ கணிசமான செல்வாக்கினைக் கொண்டிருக்கவில்லை என்றே முடிவு செய்ய வேண்டிருக்கிறது.

எனவே, இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கான அவருடைய தகுதிப்பாடு, அவருடைய கலைத் திறமையினையே பெரும்பாலும் பொறுத்திருக்கிறது. ரெம்ராண்ட், ராக்ஃபேல் வான்கோ, எல் கிராக்கோ போன்ற ஓவியர்களை லியோனார்டோ விஞ்சியிருக்கவில்லையாயினும், அவர் ஒரு முதல்தரமான ஓவியர் என்பதில் ஐயமில்லை. பிற்காலத்திய ஓவியக் கலை வளர்ச்சியில் அவருடைய செல்வாக்கைப் பொறுத்த வரையில், அவர், பிக்காசோவை அல்லது மைக்கே லாஞ்சலோவைவிடக் குறைந்த அளவு செல்வாக்கையே பெற்றிருந்தார் எனல் வேண்டும்.

லியேனார்டோவிடம் விரும்பத்தகாத ஒரு பழக்கம் இருந்தது. அவர், மாபெரும் திட்டங்களைத் தொடங்குவார் ஆனால், அவற்றை முடிக்க மாட்டார் இதன் விளைவாக மேற்சொன்ன ஓவியர்களுடையதைவிட இவரது முடிவடைந்த ஓவியங்கள் மிககுறைவாகவே உள்ளன. அவர் அடிக்கடிப் புதிய திட்டங்களைத் தொடங்கினார். பழைய திட்டத்தை முடிக்காமலேயே அடுத்து திட்டத்திற்குத் தாவினார். இவ்வாறு தமது வியக்கத்தக்க திறமைகளை லியோனார்டோ சிதறடித்து வீணாக்கினார். மர்மப் புன்னகையழகி மோனாலிசா ஓவியத்தை அற்புதமாகத் தீட்டிய இந்த ஓவியரைக் குறைந்த சாதனையாளர் எனக் கூறுவது வருத்தமளிக்கிறதென்றாலும் அவருடைய வாழ்க்கைப் பணிகளை உன்னிப்பாக ஆராய்ந்த பெரும்பாலான திறனாய்வாளர்கள் இந்த முடிவுக்கே வருகிறார்கள்.

எது எப்படியாயினும், லியோனார்டோ டா வின்சி, ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, இசை, அறிவியல், கணிதம், பொறியியல், தாவரவியல், உயிரியல், வானவியல் முதலிய பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க மேதையாக விளங்கினார் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், அழியாது நிலை பெற்றிருக்கும் அவரது சாதனைகள் மிகச்சிலவே. அவர் ஒரு புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராக விளங்கிய போதிலும், உண்மையில் கட்டப்பட்ட கட்டிடம் எதனையும் வடிவமைக்கவில்லை. அதே போல் அவர் வடித்த சிற்பங்கூட இன்று இல்லை. ஓரளவுக்கு கணிசமான எண்ணிக்கையிலான சித்திரங்களும் இருபதுக்கும் குறைவான வண்ண ஓவியங்களும் ஒரு சில குறிப்பேடுகளும் மட்டுமே இன்று அவருடைய மேதைமைக்கும் சான்றாக உள்ளன. இவற்றைக் கொண்டுதான் இருபதாம் நூற்றாண்டு வாசகர்கள் அவருடைய அதிசயத் திறமைகளை வியக்க முடிகிறது. ஆனால் அவை அறிவியலிலோ புத்தமைப்பாக்கத்திலோ செல்வாக்கு எதனையும் கொள்ளவில்லை. லியோனார்டோ அதிசயத் திறம்பாடுகளைக் கொண்டிருந்தாரெனினும் உயிர் வாழ்ந்திருந்த மிக்க செல்வாக்கு வாய்த்த நூறு பேரில் அவர் ஒருவர் அல்லர்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (1869 - 1948)


இந்தியாவின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் தலை சிறந்த தலைவராக விளங்கியவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஆவார். இந்தக் காரணத்தாலேயே, இவரை இந் நூலின் மூலப் பகுதியில் சேர்க்க வேண்டும் என்று மிகப் பலர் வலியுறுத்தினார்கள். ஆனால், இங்கிலாந்து வல்லரசின் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவுக்கு விடுதலை, முன்னரோ பின்னரோ கட்டாயமாகக் கிடைத்துவிடக்கூடிய நிலை இருந்தது. குடியேற்ற ஆதிக்க முறையை ஒழித்துக்கட்டும் வகையில் வரலாற்றுக் சக்திகள் வலுவுடன் முன்னேறிக்கொண்டு வந்ததை நோக்கும் போது காந்தி தோன்றியிராதிருந்தால் கூட 1947-இல் இல்லாவிட்டாலும் அதற்குச் சில ஆண்டுகளுக்குள்ளேயே இந்தியா உறுதியாக விடுதலையடைந்திருக்கும் என்று கூறலாம்.

அன்பை அடிப்படையாகப் கொண்டு, பகைவனையும் நேசித்து வன்முறையை அறவே விட்டொழித்துக் கொடுமைகளை அப்புறப்படுத்துவதற்கு காந்தி கையாண்ட சத்தியாக்கிரகம் என்னும் அறப்போர் முறை இந்தியாவை விட்டு வெள்ளையரை வெளியேற்றுவதில் இறுதியில் வெற்றி கண்டது என்பது உண்மைதான் எனினும், இதற்குப் பதிலாக இன்னும் சற்றுக் கடுமையான முறைகளை இந்தியர்கள் கையாண்டிருந்தால் இந்தியாவுக்கு இன்னும் முன்னதாகவே சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவர். மொத்தத்தில், இந்தியாவின் விடுதலையை காந்தி விரைவுபடுத்தினாரா என்பதை உறதியாகக் கூறுவது கடினம் எனினும், (அந்த வகையிலாயினும்) காந்தி நடவடிக்கையின் நிகர விளைவு சிறிதே என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. தவிரவும் இந்திய விடுதலை இயக்கத்தைக் தோற்றுவித்தவர் காந்தி அன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. (இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சி 1885 ஆம் ஆண்டிலேயே தொடங்கப் பெற்றுவிட்டது) மேலும், இந்தியா இறுதியாக விடுதலையடைந்தபோது காந்தி மட்டுமே முக்கியமான அரசியல் தலைவராக இருக்கவில்லை.

எனினும் காந்தியின் தலையாய முக்கியத்துவம் அவர் வலியுறுத்திய அகிம்சைக் கொள்கையையே சார்ந்திருக்கிறது எனச் சிலர் கூறுவர். (அவரது கொள்கைகள் முற்றிலும் அவருக்கே சொந்தமானவை அல்ல. தோரோ, டால்ஸ்‘டஸ் விவிலியத்தின் புதிய ஏற்பாடு, பல்வேறு இந்து வேத நூல்கள் ஆகியவற்றிலிருந்து தமது கொள்கைகளைத் தாம் பெற்றதாக காந்தி கூறியிருக்கிறார்.) காந்தியின் கொள்கைகள் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், அவை உலகை அடியோடு மாற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், தீவினைப் பயனாக, அவரது கொள்கைகள் இந்தியாவில் கூடப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

கோவாவிலிருந்து போர்ச்சுகீசியரை வெளியேற்றுவதற்கு 1954-55 இல் காந்தியின் அறப்போர் முறைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இயக்கம் தன்குறிக்கோளை எட்டுவதில் வெற்றி பெறவில்லை. அதனால் சில ஆண்டுகளுக்கு பிறகு (1962) இந்திய அரசு ஓர் இராணுவப் படையெடுப்பு மூலமாகக் கோவாவை விடுவித்தது. அது மட்டுமின்றி கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தானுடன் மூன்று முறை போர் புரிந்துள்ளது. சீனாவுடன் ஓர் எல்லைப் போரில் இந்தியா ஈடுபட்டது. காந்தியின் முறைகளைக் கையாள மற்ற நாடுகளும் தயங்குகின்றன. காந்தி தமது அறப்போர் முறையைத் தொடங்கிய பின்பு ஏறத்தாழ 70 ஆண்டுகளில், இவ்வுலகம், வரலாறு கண்டிராத இரத்தக் களரிமிக்க இருபெருங் கொடிய போர்களைக் கண்டிருக்கிறது.

அப்படியானால், ஒரு தத்துவஞானி என்ற முறையில் காந்தியைத் தோல்வி கண்டவர் என்ற முடிவுக்கு வரலாமா? தற்போதைக்கு அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயினும் இயேசு கிறிஸ்துவின் இறப்புக்கு 30 ஆண்டுகளுக்குப் பின்பு விவேகமும் கல்வியறிவும் வாய்ந்த ஓர் ரோமானியன் நாசரேத்தின் இயேசுவை - அவரைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருந்திருப்பானேயாகில் - ஒரு தோல்வியாளர் என்றே ஐயத்திற்கிடமின்றி முடிவு கட்டியிருப்பான் என்பதை இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். அத்துடன், கன்ஃபூசியஸ் எத்துணையளவுக்குச் செல்வாக்குப் பெறுவார் என்பதை கி.மு. 450 ஆம் ஆண்டில் யாரும் ஊகித்திருக்க முடியாது. எனினும், இதுகாறும் நிகழ்ந்தவற்றைக் கொண்டு மதிப்பிடும் போது இந்த நூலில் பெருமைக்குரிய ஒரு சிறப்புக் குறிப்புக்கு மட்டுமே காந்தி உரிமையுடையவர் எனத் தோன்றுகிறது.